தன்னிடத்து நிகழ்வதனைத் தன்கண் நிகழ்வது என்றும் அவ்விடப் பொருள் பற்றி ஏழம் வேற்றுமை வந்தவாறு கண்டுகொள்க.. எனா என்பது எண் இடைச்சொல். ‘அன்ன பிறவும்’ என்றதனால், பொருட்கண் உணர்வு- என்கண் அன்புஉடையன்- மலர்க்கண் நாற்றம்- ஆகாயத்துக் கண் பருந்து- என்னும் தொடக்கத்தன கொள்க. இனிக் கண் கால் முதலியவற்றை உருபு என்பாரும் உளராலோ எனின், உருபு ஆயின் ஊர்ப்புறத்து இருந்தான்- ஊர் அகத்து இருந்தான்- கை வலத்து உள்ளது கொடுக்கும்- எனப் புறம் அகம் வலம் என்பனவற்றுவழி அத்துச் சாரியை கொடுத்து உதாரணங் காட்டல் பொருந்தாமையானும், அவை வேறு வேறுபட்ட இடப்பொருள் ஆகிய பெயராய் நிற்றல் அல்லது பெயர்ப் பொருளை ஐ-ஒடு- கு- இன்- அது- போல வேறுபடுத்தும் தன்மையவாய உருபுகளாய் நிற்றல் இன்மையானும் உருபு ஆகா என்க. இவற்றைப் பொருள் என்றலே ஆசிரியர் தொல்காப்பியனாருக்கும் கருத்து என்பது சேனாவரையர் உரையான் உணர்க. வாய்- வயின்- பாடு அளை- முதலியன இடப்பொருளவாகிய பெயராய் நிற்றல் அல்லது பெயர்ப்பொருளை வேறுபடுத்தும் தன்மையவாய் நிற்றலின்மையின் அவையும் ஏழன் உருபு ஆகாமையும், கண்- கால்- முதலியன போலத் தம்முள் பொருள் வேறுபாடு உடைய அன்மையின் இவ்விடப் பொருள் பற்றிக் கண் என் உருபு வாராமையும் உணர்க. 46 |