இது மேல் இருதிணை என்றார், அவை இவை என்கின்றது. இ-ள்: உயர்திணை என்று கூறுவர் தொல்லாசிரியர், மக்கட் சுட்டினை. அம்மக்கட்சுட்டு அல்லாத பிற பொருளை அஃறிணை என்று கூறுவர் தொல்லாசிரியர் என்றவாறு. மக்கட்சுட்டு என்பது பண்புத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகை. ஈண்டு, மக்கள் என்றது ஆகுபெயரான் மக்கட் சுட்டை உணர்த்தி நின்றது. அங்ஙனம் உணர்த்தவே, மக்கட்சுட்டாகிய சுட்டு யாதன்கண் நிகழும், அது மக்கட்சுட்டு என விரியும் ‘அவர்அல’ என்று ஒழியாது ‘பிற’ என்றார், உயிர் உள்ளனவும் இல்லனவும் ஆகிய அஃறிணை இரு கூறும் அடங்குதற்கு. ஏகாரம் இரண்டும் ஈற்றசை. உயர்திணை என்பது இறந்தகால வினைத்தொகை. அஃறிணை என்பது பண்புத்தொகை. அவை முறையே உயர்ந்த திணை எனவும், அத்திணை அல்லவாகியதிணை எனவும் விரியும். திணை என்பது ஒழுக்கம். அஃது ஆகுபெயரான் அவ்வொழுக்கத்தை நிகழ்த்தும் பொருள்மேல் நின்றது. 4 |