சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

20 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இவ்வாசிரியர் சேனாவரையரைப் பின்பற்றி அன்மொழி தொகையை ஆகுபெயருள்
ஒரு கூறாகிய இருபெயரொட்டு என்று கொள்ளும் இயல்பினர். மக்களாகிய சுட்டப்படும்
சிறப்பு யாதன்கண் நிகழும், அது மக்கட்சுட்டு எனப் பண்புத்தொகை நிலைக்களத்துப்
பிறந்த அன்மொழித்தொகை என்று இவரும் சேனாவரையர் உரைத்தாங்கு உரைத்தார்
சேனாவரையர், ‘மக்கள் என்றது மக்கள் என்னும் உணர்வை என்றார். இவ்வாசிரியர்,
மக்கள் என்பது ஆகுபெயராய் மக்கட்சுட்டை உணர்த்தியது’ என அதற்கு விளக்கம்
தந்தார். எனவே மக்கட் சுட்டாகிய சுட்டு உயர்திணை என்பதால் ‘அவரல பிற’
என்பதற்குச் சேனாவரையர் முதலாயினார் போலவே இவ்வாசிரியரும் விளக்கம்
தந்துள்ளார்.

மக்கட் சுட்டே, அவரல பிறவே - ஏகாரம் இரண்டும் ஈற்றசை.

இறைவன் படைத்த காலம்தொட்டே மக்களுடைய ஒழுகலாறு உயர்ந்தமையின்,
உயர்திணை என்பது உயர் ஒழுக்கம் என்ற பொருளதாய் இறந்தகால
வினைத்தொகையாயிற்று என்று பண்டை உரையாசிரியர்கள் போல் இவரும் விளக்கந்
தந்துள்ளார். உயர்திணை வினைத்தொகை என்றே மயிலைநாதரும் குறிப்பிட்டார். இனி,
சங்கர நமசிவாயப் புலவர் முதலாயினார் உயர்திணை என்பது பண்புத்தொகையே,
வினைத்தொகை அன்று என்று விளக்குவர்.

திணை என்பது ஒழுக்கம் என்ற பொருளது என்பதே முன்னையோர் கொள்கை.
அஃது ஆகுபெயராய் அவ்வொழுக்கத்தை உடைய மக்களைக் குறித்தது என்றே
முன்னோர் பலரும் கூறிப் போந்தனர். சங்கர நமசிவாயப் புலவர் முதலாயினார் திணை
என்பதன் பொருள் ஈண்டுச் சாதியே என்ற கருத்தைச்சாதிக்க முயல்வர்.