சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

196 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

விளிக்கப்படுபெயர்கள்
 

206 இஉ ஊவோடு ஐஓ னளரல
ய-ஈற்று உயர்திணை ஓர-அல் இவற்றொடு
ணஃகான் ஆஈ றாகும் பொதுப்பெயர்
மெய்உயிர் அனைத்துஈற்று அஃறிணை விளிப்பன
ஒல்வழி அறிதல் வழக்கத் தான.
 



 

இதுமேல் ‘எய்துபெயர்’ என்றார், அவை இவை எனத் தொகுத்து உணர்த்துகின்றது.

இ-ள்: இகர உகர ஊகார ஐகார ஓகாரங்களும் னகர ளகர ரகர லகர யகரங்களும்
ஆகியபத்து ஈற்று உயர்திணைப்பெயர்களும், இவற்றுள் ஓகாரமும் ரகாரமும் ஆகிய
இரண்டனை ஒழித்து நின்ற எட்டுடனே ணகரமும் ஆகாரமும் ஆகிய பத்து ஈற்று
விரவுப்பெயர்களும், ஒற்றும் உயிரும் ஆகிய அஃறிணைப்பெயர்களும் விளி ஏற்பனவாம்.
அங்ஙனம் விளி ஏற்றற்குப் பொருந்தும் இடம் அறிக வழக்கிடத்து என்றவாறு.

‘முன்னிலை யாக்கலும் சொல்வழிப் படுத்தலும்’ (தொல்.பொருள்.101) வேண்டுழி
என்பார் ‘ஒல்வழி’ என்றார். இன்னும் அதனானே, உகரம் குற்றுகரம் எனவும்
முற்றுகரமும் சிறுபான்மை விளி ஏற்கும் எனவும் கொள்க. ஏனை ஈற்றுப் பெயர்கள்
விளி கொள்ளா என்பது தானே போதரும் என்க. 48
 

    விளக்கம்
 

மேல் என்றது சென்ற நூற்பாவினை.

உயர்திணை ஈறு - இ உ ஊ ஐ ஓ என்ற உயிரீறும், உளரலய என்ற மெய்யீறும்
ஆகிய பத்து.

விரவுத்திணை ஈறு-ஆ இ ஊ ஐ என்ற உயிரீறும், ணன ளலய என்ற மெய்யீறும்
ஆகிய பத்து.