பண்புத்தொகையும் வினைத்தொகையும் ஒருசொல் நீர்மைய ஆதலின் அவற்றை ஒரு சொல்லாகக்கொண்டு, அவற்றான் ஆகும் அன்மொழித்தொகையை ஆகுபெயர் என்று கொள்ளும் கருத்தினராகிய இவ்வாசிரியர் தாழ்குழல் என்பதனை ஆகுபெயர் என்றார். சேனாவரையர் மதம் எனினும் ஆம். தொழுத்தை என்ற சொல் தொழீஇ என்ற திரிசொல்லாய வழித் தொழீஇ இ என்றாற்போல விளிக்கண் அளபெடுக்கும் அதன் அளபெடை இகரம் ஈகாரம் ஆகாது என்பது. அளபெடைப் பெயர்கள் அளபெடை மிக்கு விளியேற்கும். பொதுவாக அளபெடைப் பெயர்கள் இறுதி திரியாது அளபெடை மிக்கு விளியேற்றலை, ஈண்டு ‘இயல்பாய் விளியேற்றன’ என்றார். தொல்காப்பியனாரும், இக்கருத்தை, |