னகர ஈறு என்று பொதுப்படக்கூறவே, அன்ஈறும் ஆன்ஈறும் கொள்ளப்பட்டன. இவற்றுள் துறைவன், ஊரன், நம்பன், எம்பெருமன், ஐயன், அன்பன், கிழவன், மாயன், முருகன் என்பன அன்ஈற்றுப் பெயராய் விளியேற்றன. வந்தான், சென்றான், வாயிலான் என்பன ஆன் ஈற்றுப் பெயராய் விளியேற்றன. னகர ஈற்று அஃறிணைப் பெயர்க்கும் விரவுப் பெயர்க்கும் விளியேற்றலின்கண் ஏற்படும் நிலை 212 ஆம் நூற்பாவில் கூறப்பெறும். ஏடன் என்றுதோழனை உணர்த்த வரும் படர்க்கைப் பெயராய் அச்சொல் பயிலாமையின், அதனை இவ்வாசிரியர் தோழனை விளித்தற்குப் பயன்படுத்தப்படும் ஏடா என்ற விளிச்சொல்லாகவே கொண்டார். |
ஏடா என்பது தோழன் முன்னிலைப் பெயராயே நிற்பது ஒன்று ஆயின் ஆண்டு உருபு ஏற்றற்கு இடம் ஆகாமையின் ‘வேற்றுமைக்கு இடனாய்’ எனச் சிறந்து எடுத்து ஓதிய பெயரிலக்கணம் வழவாய் முடியும் என்க. தோழன் முன்னிலைப் பெயர் என்றமையான் அஃது இடைச்சொல் அன்மையும் உணர்க. ஆயின் ஏடா என்பது தோழன் முன்னிலைப் பெயர் என்றது என்னை எனின், வழக்கு மிகுதி பற்றி அவ்வாறு கூறியது என்க, ‘நோனாமை பொறாமை யாமென நுவல்லர்’ என்றாரேனும், நோன்றல் என்னும் உடம்பாட்டுச் சொல் விலக்கப்படாமை போலக் கொள்க. |
நீயிர் நீவிர் நான் என்ற சொற்கள் வேற்றுமை உருபு ஏலாது இருப்பனபோல ஏடா என்பதும் விளியொன்றற்கே போல வருவதாகி ஏனைய வேற்றுமை ஏலாதிருப்பது அதன் தனிநிலைத் தன்மை என்று கொள்ளத்தக்கது. ஏடன், ஏடனை, ஏடனால் என வழங்கின்கண்ணும் செய்யுட்கண்ணும் காணப்பெறாமையும் நோக்குக. இதனை ‘முறைப்பெயர் மருங்கின் கெழுதகை பொதுச்சொல்’ (தொல்.பொருள்.220) என்புழி அடக்கலாம். |