சுட்டு எழுத்துக்களையும் முதலாக உடையவாகிய ஐம்பாலையும் குறித்து நின்ற ஐவகை இறுதியையும் இறுதியாக உடைய பெயர்களும், அவை போல்வன பிற பெயர்களும், தாம் தான் என்னும் பெயர்களும் மேல் விளி ஏற்கும் எனப் போந்த பெயரொடு கோடலை இன்றி நிற்றலை வேண்டும் ஆசிரியன் என்றவாறு.வரலாறு: தமன் தமள் தமர்- நமன் நமள் நமர்- நுமன் நுமள் நுமர்- எமன் எமள் எமர்- தம்மான் தம்மாள் தம்மார்- நம்மான் நம்மாள் நம்மார்- நும்மான் நும்மாள் நும்மார்- எம்மான் எம்மாள் எம்மார்- எனவும், எவன் எவள் எவர் எது எவை- யாவன் யாவள் யாவர் யாது யாவை- எனவும், அவன் அவள் அவர் அது அவை- இவன் இவள் இவர் இது இவை- உவன் உவள் உவர் உது உவை- எனவும், தாம் தான்- எனவும் வரும். ‘அன்ன பிறவும்’ என்றதனானே, மற்றையான் மற்றையாள் மற்றையார் மற்றையது மற்றையவை- பிறன் பிறள் பிறர்- என்பன போல்வனவும் கொள்க. |