இடம். செயப்படுபொருள் ஆகிய கோடு முதலியனவே இடமாதலும் உடைமையின் அவை இரண்டன் உருபின் பொருள் சிதையாமலேயே ஏழன் உருபும் ஏற்றற்கு ஏற்புடையனவாதல் அறிக.நான்கன் பொருளாகிய இதற்கு இது என்பதன்கண் இரண்டு மூன்று ஐந்து ஆறு ஏழு எனப் பெயரிய வேற்றுமைகள் மயங்குமாற்றிற்கு எடுத்துக்காட்டுக்கள் தரப்பட்டுள்ளன; ‘இதனது இதுஇற்ற என்னும் கிளவியும்’ தொல்.சொல். 110 என்ற நூற்பாவினையும் அதற்குச் சேனாவரையர் உரையினையும் உளங்கொண்டு வரையப்பட்டுள்ளன. உருபுமயக்கம் ஆவது தன் பொருளில் தீர்ந்து பிறிது ஒன்றன் பொருட்கண் சேறல். அதற்கு எடுத்துக்காட்டாக, மணற்கு ஈன்ற- கொக்கினுக்கு இழிந்த- என்ற நான்கன் உருபும் உருபு நோக்கிய சொல்லும் தம்முள் இயையாத் தொடர்கள், அவ்வுருபை விடுத்து மணற்கண் ஈன்ற- கொக்கினின்றும் இழிந்த- என முறையே உருபை ஏற்ற சொல்லும் உருபு நோக்கிய சொல்லும் தம்முள் இயைதற்கு ஏற்ற ஏழாவதாகவும் ஐந்தாவதாகவும் பொருள் கோடற்கண் திரித்துக் கொள்ளப்பட்ட செய்தி எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இனி, தொல்காப்பியனார் வேற்றுமை மயங்கியலிலும் நேமிநாத நூலார். உருபுமயங்கியலிலும், இலக்கணக்கொத்து நூலார் வேற்றுமையியலிலும், பிரயோக விவேக நூலார் காரகப்படலத்திலும் பொருள் மயக்கத்தை விரித்து கூறியுள்ளனர். அவற்றை ஈண்டு நோக்குவோம். |