மக்கட்சுட்டு என்பதற்கு மக்களாகிய சுட்டப்படும் பொருள் என்பது பொருளாமேனும், அந்நிலையினும் மக்கட் சுட்டு அஃறிணைச் சொல்லாகலான் ‘அஃறிணை என்மனார் அஃது அல பிறவே’ என்றலே வேண்டும். உயர்திணை என்மனார் மக்களே என்றக்காலே, ‘அஃறிணை என்மனார் அவர் அல பிறவே’ என்றல் பொருந்தும். நூற்பா நிலையில் ‘அவர் அல பிறவே’ என்பது வழுவமைதியே. இங்ஙனம் ஆகவே மக்கள் என்பது ஆகுபெயரான் மக்கட்சுட்டை உணர்த்திற்று என்றக்காலும் இழுக்கின்று. மேலும் ‘பாணன் பறையன்’ என்பன நான்கு என்ற அஃறிணைத்தொகை பெறுதல் வழுவமைதியே என்று நச்சினார்க்கினியர் உரைத்ததும் உளம் கொள்ளத்தக்கது. இறைவன் படைப்பிலேயே மன உணர்வாகிய உயர்ச்சிசொல் பெற்றமை குறித்து உயர்திணை உயர்ந்த ஒழுக்கம் (நடைமுறை, ஒழுகலாறு) என்று பண்டைய உரையாசிரியர்பலரும் குறிப்பிட்டமை உணரப்படும். அஃறிணைக்கு ஒழுகலாறு இன்று என்றலும் ஏற்புடைத்தன்று. இறைவன் படைப்பில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒழுகலாறு உண்மை வெளிப்படை ஆதலின், முனிவர் கூறுவதுபோலத் திணை என்பதற்குச் சாதி எனப் பொருள் கொள்வதும், உயர்திணை என்பதனைப் பண்புத்தொகையாகக் கொள்வதும் ஆகிய பின்னையோர் கொள்கை தனிச் சிறப்புடைத்தன்று. |