இது முதல்சினைகளை ஆராயும் முகத்தான் ஐயம் அறுத்ததும், பலபொருள்தொகுதியை உணர்த்தும் பெயர்க்கும் அவற்றின் இயல்பு ஏற்பித்தலும் நுதலிற்று. இ-ள்: முதற்பொருள் இவை, சினைப்பொருள் இவை எனத் தம்முள் வேறு வேறு பொருள் ஆகா; சொல்லுவாரது குறிப்பின் வழியவாய், முதலாயவையே சினையுமாய்ச் சினையாயவையே முதலுமாய் நிற்கும். பிண்டப் பொருண்மையை உணர்த்தும் பெயரும் அவ்வியல்பிற்றாய், முதலும் சினையுமாக வழங்கப்பட்டு முதற்கு இரண்டாவது வரின் சினைக்கு ஏழாவது வருதலும், சிறுபான்மை இரண்டாவது வருதலும், முதற்கு ஆறாவது வரின் சினைக்கு இரண்டாவது வருதலும் பொருந்தும் என்றவாறு. முதல் எனப்பட்டதுதானே தன்னைப் பிறிது ஒன்றற்கு ஏகதேசமாக விளக்கிச் சினை எனக் குறித்தவழிப் ‘படையது யானை’ எனச் சினையும், சினை எனப்பட்டது தானே தன்கண் ஏகதேசத்தை நோக்கி முதல் எனக் குறித்தவழிக் கோட்டது நுனி என முதலும் ஆம் என்பார் ‘உரைப்போர் குறிப்பின’ என்றார். |