பெயரும் வினையும்கொண்டு முடியும் பெரும்பாலும் எனச் சொல்லுவர் அறிவுடையோர் என்றவாறு,‘எல்லை இன்னும்’ அதுவும் பெயர்கொளும்’ என்றாரேனும், இன் உருபு முதலிய உருபுகளை ஏற்ற சொற்களே அவ்வாறு முடிவன எனக் கொள்க; என்னை? ஐ முதலிய ஆறும் இடைச்சொல்லாய் ஒன்றனை விசேடித்து நிற்றல் அல்லது பிறிது ஒன்றான் முடியும் தன்மை அவற்றிற்கு இன்மையின். எழுவாய் வேற்றுமைக்கு ஆண்டே முடிபு கூறினமையானும், எட்டாவது படர்க்கை இடத்தாரை முன்னிலை இடத்தார் ஆக்கும் வேறுபாடு உடைமையின் வேறொரு வேற்றுமையாக வேண்டியது அல்லது பெயரது விகாரமாய்ப் பெயராய் அடங்கும் தன்மையும் உடைத்து ஆதலான், நம்பிகூறாய் என்றவழி அதுநீ கூறாய் எனப் பெயர் வேற்றுமையை ஒத்துப் பயனிலை கொள்ளும் ஆகலானும், ஈண்டு இரண்டாவது முதல் ஆறு உருபும் ஏற்ற சொற்களுக்கே இம்முடிவு கூறியது எனக் கொள்க. பெரும்பாலும் என்றதனால், வினைகொள்வன வினையும் குறிப்பும் பற்றிய பெயர்கோடலும் கொள்க. உதாரணம் முற்காட்டியனவே கொள்க. சாத்தனது வந்தது- சாத்தனது நன்று-என ஆறாவது வினையும் வினைக் குறிப்பும் கொள்ளும் என்பாரும் உளராலோ எனின், அஃது ஆறன் உருபு ஏற்ற பெயர் அன்று; குறிப்பு வினைமுற்றுப் பெயராம் என மறுக்க. 66 |