சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

250 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

உருபு தொகப் பொருள் நிற்றலின் வேற்றுமைத் தொகையை ‘வேற்றுமைப்
பொருள்’ என்றார். அன்மொழித் தொகை வேற்றுமைத்தொகை முதலாகிய தொகை
இறுதி நின்று இயறலின் ‘ஈற்று நின்று இயலும் தொகைவயின் பிரிந்து
பல்லாறாகப்பொருள் புணர்ந்து இசைக்கும் எல்லாச் சொல்லும் விரித்தற்கு உரிய
ஆமாறு போல, வேற்றுமைத் தொகையை விரிக்குங்காலும் பல்லாறாகப் பொருள்
புணர்ந்து இசைக்கும் எல்லாச் சொல்லும் விரித்தற்கு உரியவாம் என்பார் ‘ஈற்று நின்று
இயலும் தொகைவயின் பிரிந்து- பல்லாறாகப் பொருள் புணர்ந்து இசைக்கும் - எல்லாச்
சொல்லும் உரிய’ என்று உபசரித்தார். பொற்றொடி- தாழ்குழல்- மட்காரணம்- என்னும்
அன்மொழித்தொகைகளை விரிப்புழிப் பொற்றொடி அணிந்தாள்- தாழ்குழல் உடையாள்-
மண் ஆகிய காரணத்தான் இயன்றது- எனவரும் அணிதலும் உடைமையும் இயறலும்,
பொற்றொடி அரிவை- கருங்குழற் பேதை- மட்குடம்- என்னும் வேற்றுமைத்
தொகைகளை விரிப்புழியும் பொற்றொடியை அணிந்த அரிவை- கருங்குழலை உடைய
பேதை- மண்ணான் இயன்ற குடம்- என வந்தவாறு கண்டு கொள்க. ‘பொருள் புணர்ந்து
இசைக்கும்’ எனவே, இத் தொகைக்கண்ணும் ஒருவாய்பாட்டான் அன்றிப் பொருள்
சிதையாமல் உணர்த்துதற்கு ஏற்ற வாய்பாடு எல்லாவற்றானும் வரும் என்பதாம்.
அவ்வாறு ஆதல் மேல் காட்டியவற்றுள் கண்டு கொள்க. அன்மொழித் தொகையில்
சொற்பெய்து விரித்தல் யாண்டுப் பெற்றாம் எனின், அதுவும் அநுவாத முகத்தான்
ஈண்டே பெற்றாம் என்க. 67


விளக்கம்
 

வேற்றுமை உருபு மறையவும், வேற்றுமை உருபு விரிந்து நின்றால் யாது பொருள்
உணர்த்துமோ அதே பொருளை அத்தொகை மயக்கமின்றி உணர்த்தலின் வேற்றுமைத்
தொகை வேற்றுமைப் பொருள் எனப்பட்டது.