சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-67251

வேற்றுமைத்தொகை முதலிய தொகைகள் அமையவேண்டும் நிலைக்களத்து
அத்தொகைச் சொற்களின் இறுதி நின்று அமைவது அன்மொழித்தொகை ஆதலின்
அஃது ‘ஈற்று நின்று இயலும் தொகை’ எனப்பட்டது. அன்மொழித்தொகையைப் பல
சொற்பெய்து விரிப்பது போலவே வேற்றுமைத் தொகையையும் பலசொற்பெய்து
விரிக்கலாம் என்பது இந்நூற்பாவின் கருத்து. முன்பு அன்மொழித்தொகை பல
சொற்பெய்து விரிக்கப்படும் என்று ஆசிரியர் கூறாமல் ஈண்டு வேற்றுமைத் தொகை
அன்மொழித்தொகை போல விரிக்கப்படும் என்றார். முன்பு கூறாதது ஒன்றைக்
கூறியதுபோலக் குறிப்பிடுதலும் அநுலாதம் என்பது,
 

  ‘அளபெடை மிகூஉம்.’

தொல்.சொல்.125

என்ற நூற்பா உரையுள் சேனாவரையர் உரைத்த செய்தியானும் உணரலாம்.

இந்நூற்பா உரை சேனாவரையர் உரையைப் பெரும்பாலும் ஒட்டி எழுந்தது.

மட்குடம்- மண்ணான் இயன்ற குடம்; மட்குடம் என்ற தொகையை விரிப்புழி, ஆன்என்ற உருபும் இயன்ற என்ற பொருளும் (முடிக்குஞ்சொல்) மறைந்து நின்றன
விரிக்கப்படும். இங்ஙனம் அமைந்த தொகைகளை உருபும் பொருளும் உடன் தொக்க
தொகை என்றும், உருபும் பயனும் உடன் தொக்க தொகை என்றும் கூறுப. முடிக்குஞ்
சொல்லைப் பொருள் எனவும் பயன் எனவும் கூறுவதன் காரணம், தொடர் மொழிப்
பொருளும், தொடரின் பயனும் அதன் கண்ணவாகலான். இனி வடநூலார் இவற்றை
இடைப் பதங்கள் தொக்க தொகை என்னும் பொருள்பட ‘மத்திய பதலோபன்’ என்ப.

இந்நூற்பா தொல்காப்பியச் சொற்படல 83-ஆம் நூற்பா. இதற்கு
நச்சினார்க்கினியர்சேனாவரையர் உரைத்தவாறே இவர் உரை கூறினார்.