சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-68259

இந்நூற்பாவால் முன் கூறப்பட்ட வேற்றுமைப் பொருள்கள் தொழில் நிகழ்ச்சிக்குக்
காரணம் என்பது கூறப்பட்டது.

தொழில் என்பது செய்தல்.
                    வினை என்பது செய்தல் ஆகிய புடைபெயர்ச்சி நிகழ்தற்கு அடிப்படையாகிய
சங்கற்பம். அது வனைந்தான் என்புழி, வனைதலைச் செய்தான் என்று விரிந்து
வனைதலாகிய சங்கற்பத்தை வினையாகவும் அதனைச் செயற்படுத்தும் செய்தலைத்
தொழிலாகவும் கொண்டு விளங்குவது அறிக.

கொளலோ கொண்டான் என்ற தொடரில் இரண்டாம் சொல்லாகிய கொண்டான்
என்பது வேறு பொருள் தாராது செய்தான் என்னும் பொருளாதாகிய காரிய வாசகமாக
நிற்கவே, அத்தொடர் கொள்ளுதலையோ செய்தான் என இரண்டாம்
வேற்றுமைத்தொகைநிலைத் தொடராகியது. ஈண்டுச் செய்தான் என்பதற்குக் கொள்ளுதல்
செயப்படு பொருளாயினவாறு. இவ்வாறே நடந்தான் வந்தான் முதலிய எல்லா
வினைச்சொற்களும் தம்முள் அகநிலைச் செயப்படு பொருளைக் கொண்டிருத்தலை
நடத்தலைச் செய்தான் வருதலைச் செய்தான் முதலாக விரித்து உணர்க. ஒரே
வினைச்சொல் இருமுறை அடுக்கி வரும்வழி முதலாவது வினையாகவும் இரண்டாவது
தொழில் நிலையதாகிய காரிய வாசகமாகவும் நிற்றலை,

உண்ணலும் உண்ணேன்- உண்ணுதலையும் செய்யேன் வாழலும் வாழேன்-
வாழுதலையும் செய்யேன் அணியலும் அணிந்தன்று- அணிதலையும் செய்தது என்ற
தொடர் விளக்கத்தான் அறிக.

காரணம் முன் நிகழக் காரியம் பின் நிகழ்வது ஒன்று ஆதலின், காரணம் முதல்
என்ற பெயரான் குறிக்கப்பட்டது. கிரியாசம்பந்தம் காரகம் ஆதலின் ஒரு தொழில்
தோன்றுதற்குரிய காரணங்களைக் காரகம் என்றும் கூறுவர்.