இஃது ஐயம்அறுத்தல் நுதலிற்று, மேல்தொகையுள் ஒழிந்த தெய்வத்தினையும், [வகையுள் ஒழிந்த பேட்டினையும்] இவ்வாறாம் என்றலின். இ-ள்: தெய்வமும் பேடும் ஆகிய அவ்விருவகையும் இவை எனத் தம்பொருளினை வேறு அறிய நிற்கும் ஈற்று எழுத்தினைத் தமக்கு உடைய அல்ல ஆயினும், உயர்திணை இடத்திற்கு உரிய பாலாய் வேறுபட்டு இசைக்கும் என்றவாறு. பேடு எனப் பொதுப்படக் கூறிய அதனானே, பெண் அவாய் ஆண்தன்மை திரிந்ததூஉம் ஆண்அவாய்ப்பெண் தன்மை திரிந்ததூஉம் என அஃது இருவகைப்படும். பால் வேறுபட்டு இசைத்தலாவது தாம் உயர்திணைப் பொருளவாய் ஆண்பாற்கு உரிய ஈற்றானும் பெண்பாற்கு உரிய ஈற்றானும் பலர்பாற்கு உரிய ஈற்றானும் இசைத்தலாம். ‘அந்தம் தமக்கு இல’ என்ற மிகையானே, நரகர் அலி மகண்மா முதலியவற்றையும் இம்மூவீற்றுள் ஏற்பது ஒன்றனான் முடித்தலும் மக்கட்டன்மை நிரம்பாமையின் பேட்டினை அஃறிணை வாய்ப்பாட்டான் இசைத்தலும் கொள்க. வரலாறு: தேவன் வந்தான்- தேவி வந்தாள்- தேவர் வந்தார் எனவும், பேடன்வந்தான்- பேடிவந்தாள்- பேடர் வந்தார் எனவும், நரகன் வந்தான்- நரகி வந்தாள்- நரகர் வந்தார் எனவும், அலிவந்தான்- அலியர் வந்தார் எனவும், மகண்மா வந்தாள் எனவும், பேடுவந்தது- பேடுகள் வந்தன எனவும் வரும். தேவன்மார், தேவர்கள், தேவியர், தேவிமார், தேவிகள், பேடன்மார், பேடர்கள், பேடியர், பேடிமார், பேடிகள்-என்றார் போல்வனவும் கொள்க. 7 |