சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

282 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

தெய்வச்சிலையார் ‘இறப்பின் நிகழ்வின் எதிர்வின்’ (தொல்.சொல்.242) என்ற
நூற்பா உரையில் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம், குறிப்பு என்பனவற்றைத்
தன்மை முன்னிலை படர்க்கை என்ற மூன்று இடங்களின் ஒருமை பன்மைப்பால்களொடு
உறழ, வினைமுற்று இருபத்து நான்காகும் என்பர்.

வீர சோழிய நூலார் மூவிடங்களிலும் ஒருமைச் சிறப்பு என ஒன்றனைக்
கொண்டார். ஒருமைச்சிறப்பாவது ஒருவனையும் ஒருத்தியையும் ஒருவர் என்னும் சொல்
முதலியவற்றான் கூறுதலும், தன்மை ஒருமைக்கண் தன்னை உயர்த்துதற்கண் யான்
என்பதனை யாம் என்னும் சொல்லால் கூறுதலும், முன்னிலைக்கண் ஒருவனையோ,
ஒருத்தியையோ உயர்த்தற்கண் நீயிர் என்ற சொல்லால் கூறுதலும் ஆம். இவை
பொருளால் ஒருமையவேனும் சொல்லமைப்பால் பன்மை வினைக்கு ஏற்றலின்,
ஒருமையினின்றும் பிரிக்கப்பட்டுப் பன்மையோடும் இணைக்கப்படாமல் தனியே சிறப்பு’
என்று பெயரிடப்பட்டன.

அம்முறையில் படர்க்கைக்கண் ஒருவன்- ஒருத்தி-சிறப்பு- பலர்- ஒன்று-பல- என
ஆறுவகைகளும், தன்மையிலும் முன்னிலையிலும் ஒருமை- சிறப்பு- பன்மை- என்ற
மூன்று வகைகளும் உள்ளன. இவற்றை முக்காலங்களோடும் இணைத்துத் தனித்தனியே
காணும்போது படர்க்கை வினைமுற்று வகை 18, தன்மை வினை முற்று வகை 9,
முன்னிலை வினை முற்று வகை 9-ஆக வினை முற்று வகை 36 என்று வீரசோழியம்
குறிப்பிடுகிறது. நூற்பா 71, 72

உயர்திணை, அஃறிணை, விரவு என்ற மூன்றுதிணையொடு இறப்பு, நிகழ்வு,
எதிர்வு, குறிப்பு என்ற நான்கனையும் உறழவினைமுற்றுச் சொல் பன்னிரு வகைப்படும்
என்பது நேமிநாதத்தின் கருத்து. சொல். 39