படர்க்கையின் ஐந்து பால்களுக்குள் உயர்திணைக்குரிய மூன்று பால்களுக்கும் உரியவினைமுற்று விகுதிகள் இந்நூற்பாவில் கூறப்பட்டுள்ளன. அன், ஆன்- ஆண்பால்; அள், ஆள்- பெண்பால்; அர், ஆர், ப, மார்- பலர்பால். இவற்றுள் ப, மார் என்பன எதிர்காலம் காட்டும்; ஏனைய விகுதிகள் இடைநிலை பெற்று மூன்று காலமும் காட்டுவனவாயும் வினைக்குறிப்பாயே வருவனவாயும் உள்ள முற்றுக்களின் இறுதிநிலையாகும். பொதுவாக முற்றுக்கள் பெயரையே கொண்டு முடிதல் வேண்டும்; வினையெச்சமே வினைகொண்டு முடியும்; ஆனால் மார் ஈற்றுவினை வினைகொண்டு முடிந்தாலும் முற்றாகவே கொள்ளப்படும் என்பது. |
அஞ்சினன்- அஞ்சு- குற்றியலுகர ஈற்றுப்பகுதி; இன் இடைநிலை. உரிஞினன் முதலிய மெய்யீற்றுச் சொற்களினும் இன் இடைநிலை. எனவே, க் ட் த் ற் இன என்பன இறந்த கால இடைநிலைகள் ஆம். ஆநின்று, கின்று, கிட, இரு- என்பன நிகழ்கால இடைநிலைகள். மொழிகுவன்- மொழி பகுதி; கு- சாரியை; வ்- இடைநிலை; அன்- விகுதி. உரிஞுவன்- உரிஞ்- பகுதி; உ-சாரியை; வ்-இடைநிலை; அன்-விகுதி. புக்கனன்- புகு+க்+அன்+அன்-புகு-பகுதி; க்-இடைநிலை; அன்-சாரியை; அன்-விகுதி. புக்கான்- புகு+க்+ஆன்-ஆன் ஈறு வந்தவிடத்துச் சாரியை இன்று. |