சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

288 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

உண்ப- உண்+ப-உண்-பகுதி; ப-விகுதி. விகுதியே எதிர்காலம் காட்டியது.
 

  உரிஞுப-உரிஞ்+ உ+ ப-உகரம்- சாரியை.
எள்ளுமார்- எள்+உ+மார்- உகரம் சாரியை.
கொண்மார்- கொள்+மார்-சாரியை இன்று.
 

உண்டிலன்-உண்பகுதி; ட்-இறந்தகால இடைநிலை; இல்-எதிர்மறை இடைநிலை; அன்-விகுதி.

உண்ணாநின்றிலன்- உண்-பகுதி; ஆநின்று- நிகழ்கால இடைநிலை; இல்- எதிர்மறை இடைநிலை; அன்-விகுதி.

‘இல்’ என்ற எதிர்மறை இடைநிலை வருமிடத்துக்காலங் காட்டும் இடைநிலை உடன் வருதலுண்டு என்று அறிக.

அல் என்ற எதிர்மறை இடைநிலைக்கு இம்மரபு இன்று.

உண்ணலன்- உண்-பகுதி; அல்- எதிர்மறை இடைநிலை; அன் விகுதி.

பாடன்மார் எமரே-காணன்மார் எமரே-என்புழி, மார் ஈற்று வினைமுற்றுக்கள் எதிர்மறை வியங்கோள் முற்றுக்களாகவாவது ஏவல் முற்றுக்களாகவாவது கொள்ளப்படும்; பலர்பால் முற்றுக்கள் அல்ல என்பது.

கரியன்-கரு+அன் என்று பிரித்தலே இவர்க்குக் கருத்தாம் என்க.

செய்திகள் தொல்காப்பியச் சொல்லதிகார நச்சினார்க்கினியர் உரையையே பெரும்பாலும் உட்கொண்டவை. (204-209)
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘அன் ஆன் அள் ஆள் என்னும் நான்கும்
ஒருவர் மருங்கின் படர்க்கைச் சொல்லே.’

தொல்.சொல்.205