இஃது உயர்திணை வினைக்குறிப்பினுள் ஒன்றற்குப் பால்வகையான் பொதுமை கூறுகின்றது. இ-ள்: யார் என்னும் வினாப்பொருளை உணர்த்தும் வினைக்குறிப்பு முற்றுச்சொல் உயர்திணை மருங்கின் மூன்று பாற்கும் உரித்து என்றவாறு. முப்பாற்கும் உரித்து என்பார் ‘முப்பால்’ என்றார், சொல்லொடு பொருட்கு ஒற்றுமை உண்மையான். ‘இழி இருபால்’ என்பதற்கும் இவ்வுரை கொள்க. வரலாறு: அவன்யார், அவள்யார் அவர்யார்-என வரும். |