சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

292 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இ-ள் தறட என்னும் ஒற்றுக்களை ஏறி நின்ற குற்றியலுகரத்தினை ஈறாக உடைய
வினை வினைக்குறிப்பு முற்றுச் சொற்கள் அஃறிணை ஒருமைப் படர்க்கையினையும்,
அகரமும் ஆகாரமும் ஆகிய இரு விகுதியை உடைய வினை வினைக்குறிப்பு
முற்றுச்சொற்கள் அஃறிணைப் பன்மைப் படர்க்கையினையும் விளக்கும். அத்தன்மைய
ஆகிய வினைமுற்றுச் சொற்களுள் டுவ் விகுதியை இறுதியாக உடைய வினைச் சொல்
குறிப்புப் பொருண்மையை விளக்குதற்கு ஏற்புடைத்து ஆதலும், ஆகார ஈற்று
வினைச்சொல் எதிர்மறைத் தொழில் பொருண்மையை விளக்குதற்கு ஏற்புடைத்து
ஆதலும், உரியவாம் என்றவாறு.

மேல் பதவியலுள் கூறிய இடைநிலை வகையானே தகர உகரம் மூன்று
காலத்திற்கும் உரித்து; றகர உகரம் இறந்த காலத்திற்கு உரித்து. அவற்றுள் தகர உகரம்
இறந்தகாலம் பற்றி வருங்கால், புக்கது- உண்டது- வந்தது- சென்றது- உறங்கினது-
எனக் கடதறக்களும் இன்னும் என்னும் இடை நிலைகளின் முன் அகரம் பெற்றும்,
எஞ்சியது- தப்பியது கலக்கியது- எனவும், உரிஞியது- நண்ணியது- எனவும், போயது-
போனது- எனவும் ஏனை எழுத்துக்களின் முன் முறையே இகரமும் யகர உயிர்மெய்யும்
பெற்றும், யகர உயிர்மெய்யே பெற்றும், னகர உயிர்மெய்யே பெற்றும் வரும்.

இனி, நிகழ்காலம் பற்றி வருங்கால், நடவாநின்றது- நடக்கின்றது- என ஆநின்று
கின்று என்னும் இடைநிலைகளின் முன் அகரம் பெற்று வரும். இனி, எதிர்காலம் பற்றி
வருங்கால், நடப்பது- வருவது- எனப் பகர வகர இடைநிலைகளின் முன் அகரம்
பெற்றுவரும்.

இனி, றகர உகரம் புக்கன்று- உண்டன்று- வந்தன்று- சென்றன்று- எனக் கடதற
என்னும் இடைநிலைகளின் முன் அன்பெற்றும், கூயின்று- கூயிற்று- உறங்கின்று-
உறங்கிற்று-என இன் இடைநிலை பெற்று அது திரியாதும் திரிந்தும் வரும்.