என அன் இடைநிலை பெற்றும், போய என யகர இடைநிலை பெற்றும், போன என னகர இடைநிலை பெற்றும் வரும்.இனி நிகழ்காலம் பற்றி வருங்கால், உண்ணாநின்றன- உண்ணாநின்றன- உண்கின்றன- உண்கின்ற- என ஆநின்றுகின்று என்னும் இடைநிலைகளின் முன் அன்சாரியை பெற்றும் பெறாதும் வரும். இனி எதிர்காலம் பற்றி வருங்கால், உண்பன- உண்ப- வருவன- வருவ- எனப் பகர வகர இடைநிலை எழுத்துக்களின்முன் அன் பெற்றும் பெறாதும் வரும். உரிஞுவன உரிஞுவ-உண்குவன உண்குவ-என முதல் நிலை இறுதிக்கண் உகரம் பெற்றும் ககரஉகரம் பெற்றும் வருதலும் ஏற்புழிக் கொள்க. இனி, ஆகாரம் உண்ணா-தின்னா- எனக் கால எழுத்துப் பெறாது எதிர்காலத்துப் பயின்று வரும். இனி, அகர ஈறு வினைக் குறிப்பின்கண் மூன்று காலத்திற்கும் உரித்தாய்க் குழையன- குழைய-நிலத்தன- நிலத்த- மூவாட்டையன- மூவாட்டைய- வெண்கோட்டன- வெண்கோட்ட- கரியன- கரிய- நடையன- நடைய- என அன்பெற்றும் பெறாதும் வரும். இனி வகர ஈறும் ஓதுப அஃது ஈண்டு அகர ஈற்றுள் அடங்கும். இன்று இல-கோடின்று கோடில-கோடு உடைத்து கோடு உடைய- அதுவன்று அவையல்ல- உளதுஉள- பொன்னன்னது பொன்னன்ன என்பன போல ஒருமை உணர்த்துவனவும் பன்மை உணர்த்துவனவும் ஆகிய வினைக்குறிப்பு முற்றுக்களும் இவற்றுள்ளே அடங்குமாறு அறிந்து அடக்கிக் கொள்க. வந்திலது, வந்தில- என்பன முதலியவற்றின்மறைவாய்பாடும் அறிக. ஒன்றன் படர்க்கை பலவின் படர்க்கை எனவே அஃறிணையாம் என்பதூஉம் பெற்றாம். 8 |