இஃது அஃறிணை வினைக்குறிப்பினுள் ஒன்றற்குப் பால் வகையான் பொதுமை கூறுகின்றது. இ-ள்: எவன் என்னும் வினாப்பொருளை உணர்த்தும் வினைக்குறிப்பு முற்றுச்சொல் அஃறிணை மருங்கின் இருபாற்கும் உரித்து என்றவாறு. வரலாறு: அஃதெவன், அவைஎவன்- என வரும். நுமக்கு இவன் எவனாம் என உயர்திணைக் கண்ணும் வருமாலோ எனின், ஆண்டு அது முறைபற்றி நிற்றலின் அஃறிணைக்கண் வந்தது எனவே படும் என்பது. அஃதேல், நுமக்கு இவன் என்ன முறையனாம் என்பது அல்லது என்ன முறையாம் என்பது பொருந்தாது எனின், என்னமுறை என்பது ஆண்டு முறைமேல் நில்லாது ஒற்றுமை நயத்தான் முறை உடையான் மேல் நிற்றலின் பொருந்தும் என்க. படுத்தல் ஓசையான் எவன் என்பது பெயரும் ஆம். அஃது இக்காலத்து என் என்றும் என்னை என்றும் மருவிற்று. 9 |