ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாகவே நிற்கும் என்பது. யாவன் என்பதன் திரிபாய் எவன் எனப்படும் ஆண்பால் வினாப்பெயர் வேறு; எவன் என்ற அஃறிணைப் பொதுக் குறிப்பு வினைமுற்று வேறு என்பதும் அறிக.நுமக்கு இவன் எவனாம் என்ற தொடர் பற்றிய அமைதி தொல்காப்பியச் சொற்படல 219ஆம் நூற்பாவில் சேனாவரையர் உரைத்த செய்தியே. எவன் என்பது படுத்தல் ஓசையால் பெயராகும் என்ற செய்தி தொல்காப்பிய எழுத்துப்படல 122ஆம் நூற்பாவுரையுள் நச்சினார்க்கினியரால் குறிக்கப்பட்டுள்ளது. எவன் என்ற ஆண்பாற்பெயர் பிற்காலத்தில் தோன்றிற்றாக, அதற்கும் எவன் என்ற அஃறிணைப் பொதுக்குறிப்பு வினைக்கும் வேறுபாடு அறிதல் வேண்டி இக் காலத்தார் பின்னதனை என் என்றும் என்னை என்றும் திரித்து வழங்கு வாராயினர். இந்நூற்பாவுரை சேனாவரையர் நச்சினார்க்கினியர் இருவர் உரையையும் தழுவி வந்துள்ளது. (தொல்.சொல். 221 நச்.) |