நிறுத்தமுறை- 229ஆம் நூற்பாவில் நிறுத்தமுறை. தன்மை- தன் தொழிலை உணர்த்துவது. முன்னிலை- தனக்கு எதிர்முகமாக நின்ற பொருளின் தொழிலை உணர்த்துவது. வியங்கோள்- ஏவலைக்கொள்ளுவது. வியங்கோள் வாழ்த்துதல், வைதல் வேண்டிக்கோடல் முதலிய பிற பொருளும் பற்றி வருமேனும் மிகுதி பற்றி ஏவற் பொருட்கண் வந்தது எனப்பட்டது. உண்டு- ஒரு பொருளின் உண்மைப்பண்பைச் சுட்டும் உண்டு என்ற பொதுவினை- தொல்காப்பியனார் காலத்தில் உளன் உளள் உளர் உள என்றாற்போல அஃறிணை ஒருமையை மாத்திரம் உணர்த்தும் ‘உண்டு’ என்ற குறிப்பு முற்று இருந்தது. பிற்காலத்தில் இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவாகிய உண்டு என்ற பொதுக்குறிப்பு முற்றும் இடம் பெறலாயிற்று. |