உண்டான் என்ற சொல்லில் உண்ணுதல் வினை அகநிலைச் செயப்படுபொருளாய் நிற்றலின், உண்ணுதலைச் செய்தான் என விளக்கி விரிக்குமிடத்து, உண்ணுதலை வினை என்றும், செய்தலைத் தொழில் என்றும் பெயரிடுதல், ‘வினையே செய்வது’ (தொல்.சொல்.112) என்ற நூற்பாவுரையிலும் கூறப்பட்டது. எல்லாவினைச்சொற்களிலும் வினைப்பகுதியை வினையாகவும் செய்தலைத் தொழிலாகவும் கோடலே தொல்லாசிரியர் மரபு. எல்லாத் தொழிலும் செய்தல் வேறுபாடு ஆகலின்.............இயையாதாம் என்க’ என்பது சேனாவரையர் உரை. தொல்.சொல். 222 சொல்லுவான் உயர்திணை அஃறிணை என்று அறிந்து சொல்லினும் அச்சொல்லினுள் உயர்திணை அஃறிணை என்று வரையறுத்துப் பாகுபாடு செய்தற்குரிய கருவி இன்மையின் விரவுத்திணை என்பதும் கொள்ளப்பட்டது. விரவுத்திணை கொள்ளப்படவே விரவுத்திணைப் பெயரும், விரவுத்திணை வினையும் உளவாதல் உணரப்படும். உரைச்செய்தி பெரும்பான்மையும் நச்சினார்க்கினியர் தொல்காப்பியச் சொற்படல 224 ஆம் நூற்பாவில் சொற்றனவே. |