பெயர்த்தனென், சேந்தனை, மோயினள் என்ற தன்மை முன்னிலை படர்க்கை முற்றுக்கள் வினைகொண்டு முடிந்தவழி, அவை முற்றெச்சம் எனப்பட்டன; ஆயின், காண்கு- காண்கும்- என்பன வினைகொண்டு முடிந்த வழிபும், அவற்றை முற்றெச்சம் என்னாது முற்று என்றே கொள்ளுதல் வேண்டும். இரு சாரன- செய்கு என் முற்றும், மூவிட முற்றுக்களும். செய்கு என்பது எதிர்கால முற்று; அதனை இறந்த காலத்திற்கு உரிய செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சமாகத் திரித்தல் இயலாது; செய என் எச்சமாகத் திரித்தால், செய என் எச்சம் தன் வினைமுதல் வினையும் பிற வினைமுதல் வினையும் கொண்டு முடிவதுபோலச் செய்கு என்ற முற்றின் திரிபும் அவ்விரு வினைகளையும் கொண்டு முடிதல் வேண்டும். செய்கு என்பதோ தன் வினைமுதல்வினையைத்தான் கொண்டு முடியும்; முடியவே, எந்த எச்சமாகவும் திரிப்பதற்கு ஏலாமையின் செய்கு- செய்கும்- என்பனவற்றை முற்றாகவே கொண்டுவிட்டார். இவ்வினைமுற்றுக்கள் பிற்காலத்தில் சிறுபான்மை பெயர்கொண்டு முடியும் என்பதும், விகுதிகள் உடன்பாடு மறை என்ற இரண்டற்கும் பொது ஆதலான் மறைவாய்பாடுகளும் கொள்ளப்படும் என்பதும் கூறப்பட்டன. |