இது முறையானே முன்னிலை ஒருமை வினையும் பன்மை வினையும் கூறுகின்றது. இ-ள்: ஐயும் ஆயும் இகரமும் ஆகிய மூவகை ஈற்றையுடைய சொற்களும் ஏவல் பொருண்மைக்கண் வரும் இருபத்து மூவகை ஈற்றொடு அல்- ஆல்- ஏல்- காண்- என்னும் நான்கு ஈற்றையும் உடைய சொற்களும் உயர்திணை ஆண்பால் ஒருமையும் பெண்பால் ஒருமையும் அஃறிணை ஒருமையும் உணர்த்தும் முன்னிலைவினை வினைக்குறிப்பு முற்றுக்களும், இர்- ஈர்- என்னும் இரு வகை ஈற்றை உடைய சொற்களும் உயர்திணைப்பல்லோரையும் அஃறிணைக்கண் பலவற்றையும் உணர்த்தும் முன்னிலை வினை வினைக் குறிப்பு முற்றுக்களும், மின்னும் உம்மும் ஆகிய ஈற்றை உடைய சொற்கள் அவ்விருதிணை ஏவலையும் உணர்த்தும் பன்மை வினைமுற்றும் ஆம் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. வரலாறு: உண்டனை- உண்ணாநின்றனை- உண்பை- எனவும், உண்டாய்- உண்ணாநின்றாய்- உண்பாய் எனவும் ஐகார ஈறும் ஆய்ஈறும் மூன்று காலமும் பற்றிவரும். ஏனையவற்றொடும் ஒட்டுக. ‘ஐய சிறிது என்னை ஊக்கி’ (கலி.37) உண்டி, ‘ஈதல் மாட்டு ஒத்தி பெரும்’ (கலி.86) உரைத்தி, தின்றி, போறி என, இகரஈறு கடதறக்களை ஊர்ந்து எதிர் காலம் பற்றி வரும். |