நிறுத்தமுறை- 236ஆம் நூற்பாவில் நிறுத்தமுறை. முன்னிலை இருதிணைப் பொதுவினை ஆகலான் முன்னிலை ஒருமை ஆண்பால்- பெண்பால்- ஒன்றன்பால்- மூன்றற்கும் பொது. இதன் விகுதிகள் ஐ, ஆய், இ, அல், ஆல் ஏல், காண் என்பன; வினைப்பகுதி மாத்திரமாகி ஒருமை ஏவலை உணர்த்தும் ‘நடவாமடிசீ’ முதலாகிய இருபத்துமூன்று ஈற்றுச்சொற்களும் முன்னிலை ஒருமைக்கண்ணவாம். முன்னிலைப்பன்மை உணர்திணைப்பன்மையையும் அஃறிணைப் பன்மையையும் குறிக்கும். இர் ஈர், மின், உம் என்பன அதன் விகுதிகள். இவற்றுள் மின்னும் உம்மும் ஏவலை உணர்த்தும். முன்னிலை வினை முன்னின்றான் தொழில் உணர்த்துவனவும் முன்னின்றானைத் தொழிற்படுத்துவனவும் எனஇருவகைப்பட்டு, மூன்று காலத்திற்கும் வினைக்குறிப்பிற்கும் உரிய முன்னின்றான்வினையையும், எதிர்காலத்திற்கே உரிய முன்னின்றானைத்- தொழிற்படுத்தும்- ஏவல்வினையையும் உணர்த்துமாறு உணர்க. |