சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-933

பெயரானும் ஒருமைப்பாலும் பன்மைப்பாலும் அறியப்படும் என்றவாறு.

தன்மை முன்னிலை வினைமுற்று - பெயர்களால் ஒருமைப்பாலும் பன்மைப்பாலும்
அறியப்படும் எனவே, தன்மை முன்னிலைகள் இருதிணைக்கும் பொதுவாய் நிற்றல்
பெற்றாம்.

எ-டு: உண்டான் உண்டாள் உண்டார் உண்டது உண்டன எனவும். அவன் அவள்
அவர் அது அவை எனவும் படர்க்கை முற்றுவினையானும் படர்க்கைப் பெயரானும்
திணையும் பாலும் விளங்கின. இருதிணைக்கும் ஆண்பால் பெண்பால்களுக்கும்
பொதுவாய் நிற்கும் நீ நீர் என்பன, நீவருதலான் அறிவுபெற்றேன்- என்றக்கால்
உயர்திணை என்பதூஉம், ஆண்பால் என்பதூஉம், நீ வருதலான் முல்லை அரும்பின-
நீர் தொக்கு நிற்றலான் உடம்பு ஆயிற்று- என்றக்கால் மழை என்பதூஉம் ஐம்பூதம்
என்பதூஉம் குறிப்பான் விளங்கின. இருபாற்கும் பொதுவாய் நிற்கும் ஒருவர் என்பதூஉம்
ஒருவரான் அரியதவம் பெற்றேன் என்றக்கால் ஆண்பால் என்பதூஉம், ஒருவரான் அரிய
மடல் பெற்றேன் என்றக்கால் பெண்பால் என்பதூஉம் குறிப்பான் விளங்கின. அறிவும்
ஆசாரமும் பெண்பாலால் பெறல் ஆகவோ எனின், ஆகா;

‘நுண்ணறிவு உடையோர் நூலொடு பழகினும்
                    பெண்ணறிவு என்பது பெரும்பே தைமைத்தே’
என்ப ஆகலின்.

உண்டேன் உண்டேம் உண்டாய் உண்டீர் எனவும், யான் யாம் நீ நீர் எனவும்
தன்மை முன்னிலை வினைமுற்றானும் பெயரானும் ஒருமைப்பாலும் பன்மைப்பாலும்
விளங்கின. பிறவும் அன்ன. வினையைமுற்கூறினார், பெயரால் திணைபால் அறிதல்
சிறுபான்மைத்து என்பது அறிவித்தற்கு. 9