இது முன்னர் வினையெச்சம் செய்து செய்யூ முதலிய வாய்பாடுபற்றி வரும் என்றார், அவை இவை என்பதூஉம், அவற்றால் புலப்படும் காலம் இவை என்பதூஉம் கூறுகின்றது. இ-ள்: உகரமும் ஊகாரமும் ஆகாரமும் புகரமும் எனவும் அகரமும் இன்னும் இயவும் இயரும் ஆகிய இறுதி இடைச்சொற்களான் வேறுபட்ட செய் என்னும் வாய்பாடு பற்றி வரும் செய்து என்பது முதலிய ஒன்பதும், வான்-பான் பாக்கு- ஆகிய இறுதி இடைச்சொற்களான் வேறுபட்ட செய் என்னும் வாய்பாடு பற்றி வரும் செய்வான் செய்பான் செய்பாக்கு என்னும் மூன்றும், இவை போல்வன பிறவும் வினையெச்சத் திறத்தினவாம். நிறுத்த முறையானே முதற்கண் நின்ற ஐந்தும் இடைக்கண் நின்ற ஒன்றும் இறுதிக்கண் நின்ற ஆறும் இறந்தகாலமும் நிகழ்காலமும் எதிர்காலமும் புலப்பட நிற்கும் என்றவாறு. வான் பான் பாக்கு என்னும் இடைச்சொல் இறுதி வினைச்சொல்லை ஆகுபெயரான் ‘வான்பான் பாக்கு’ என்றார். இவற்றுள் உகர ஈறு நக்கு- உண்டு- வந்து- சென்று- எனக் கடதறக்களை ஊர்ந்து இறந்தகாலம்பற்றி வரும். ஊகார ஈறும் ஆகார ஈறும்- உண்ணூவந்தான், தின்னூவந்தான். |