வட நூலார் கிருத்துவா- கர்த்துமுன்- என்பனவற்றைத் துவா- துமுன்- எனஈறு பற்றி உரைத்தாற்போலத் தொல்காப்பியனாரும் ‘பின்முன் கால்கடை வழிஇடத்து’ தொல்.சொல்.229 என்று கூறவே, அதனை இவ்வாசிரியர் சுருக்க நூலாகிய இதன்கண் உரையில் கொண்டார். ‘வினையெச்சம் பிற’ என்பதனானே. உணற்கு, என்னும் குகர ஈறும், பின்-முன்-கால்- கடை- வழி- இடத்து- என்ற ஈறுகளும், அன்றி-இன்றி- அல்லது- அல்லால்- ஏல்- ஏன்- என்பனவும் கொள்க. அன்றி முதலியன குறிப்பு வினையெச்சங்களாம். உணற்கு வந்தான் என வினையைக் கொண்டு முடிந்த இடத்து உணற்கு என்பது செயற்கு என்னும் வாய்பாட்டு வினையெச்சம். உணற்குச் சோறு எனப்பெயர் கொண்டு முடிந்தவழி உண்பதற்கு என்ற பொருளில் உணல் என்ற தொழிற்பெயர் நான்கன் உருபாகிய குகரம் ஏற்று வந்த உருபேற்றபெயர் என்பது. இவ்வேறுபாடு இடம் நோக்கி உணர்க. எற்றுக்கு வந்தான் எவற்றிற்கு வந்தான் என்பன என்ன காரியம் செய்தற்கு வந்தான் என்னும் பொருளவாய் வருதலின், இவை செயற்கு என்ற வாய்பாடு பற்றி வந்த குறிப்பு வினையெச்சங்களாம். கூதிர் போயபின் வந்தான், நின்ற இடத்து நின்றான் என்ற தொடர்களில் பின்- இடம்- என்பன பெயர்கள்; போய- நின்ற- என்ற பெயரெச்சங்கள் அவற்றைக்கொண்டு முடிந்து பொருள் முற்றின என அறிக. போயபின், நின்ற இடத்து என்புழிப் பின்-இடம்- என்பன ஏழாம்வேற்றுமை உருபு என்று கூறின், உருபு பெயர்ப்பின்னரேயே வருதல் வேண்டுமாதலானும், போய- நின்ற- என்பன பெயரெச்ச வினைகள் ஆதலானும் இவற்றை உருபு எனல் கூடாது. |