இஃது இன்னும் வினையெச்சத்திற்கு எய்தியதன்மேல் சிறப்புவிதி கூறுகின்றது; ‘தன்வினை பிறவினை ஆயிரு வினையொடு, முடியும் முறையது வினையெச்சமே’ எனப் பொதுவகையான் எய்துவித்ததனை ஈண்டுச் சிறப்பு வகையான் எய்துவிக்கின்றமையின். இ-ள்: முற்கூறிய பன்னிரண்டனுள் முதற்கண் நின்ற செய்து செய்யூ செய்யா செய்பு என்னும் நான்கும் ஈற்றின் கண் நின்ற செய்வான் செய்யான் செய்பாக்கு என்னும் மூன்றும் தம்மை நிகழ்த்தின கருத்தாவினது வினையைக் கொண்டு முடியும். பிறகருத்தாவினது வினையையும் உம்மையால் தன்மை நிகழ்த்தின கருத்தாவினது வினையையும் கொண்டு முடியும், ஏனை ஐவகை எச்சங்களும் என்றவாறு. எ-டு: உண்டு வந்தான்- வந்து தோன்றினான். |