‘கொல்வான் கொடித்தானை கொண்டெழுந்தான்’ கொல்வானும் எழுந்தானும் அரசனே. ‘திருவில்தான் மாரி கற்பான் துவலைநாட் செய்ததே போல்’ கற்றலும் துவலைசெய்தலும் வில்லின் தொழில்கள். ‘புணர்தரு செல்வம் தருபாக்குச் சென்றார்’ தருதலும் செல்லுதலும் தலைவன் தொழில்கள். இவை வான்பான் பாக்கு என்ற வினையெச்சங்கள் தன்வினைமுதல் வினை கொண்டமைக்கு எடுத்துக்காட்டு. மழை பெய்தெனப் புகழ் பெற்றது- பெய்தலும்புகழ்பெறுதலும் மழையின் தொழில்கள். அது செய்தென என எச்சம் தன்வினைமுதல்வினை கொண்டமைக்கு எடுத்துக்காட்டு. ‘சிறுகுடி பசித்தெனக் கடுங்கண் யானைக் கோடு நொடுத்து உண்ணும்-வல்வில்ஓரி’ என்ற தொடரில் பசித்தல் சிறுகுடியின் தொழில்; நொடுத்து உண்ணுதல் வல்வில் ஓரியின் தொழில். மழை பெய்தென மரம் குழைத்தது- பெய்தல் மழையின் தொழில்; குழைத்தல் மரத்தின் தொழில். ‘கோவா ஆரம் வீழ்ந்தெனக்குளிர் கொண்டு பேஎம் நாறும் தாழ்நீர்ப் பனிச்சுனை’ என்ற தொடரில் வீழ்தல் சந்தன மரத்தது தொழில்; நுரை தோன்றுதல் சுனையினது தொழில். இவை செய்தென என்னும் எச்சம் பிறவினைமுதல்வினை கொண்டமைக்கு எடுத்துக்காட்டு. மழை பெய்யப் புகழ் பெற்றது- பெய்தலும் புகழ் பெறுதலும் மழையின் தொழில். |