‘கொளக்கொளக் குறைபடாக் கூழுடைவியனகர்’
என்ற தொடரில் கொள்ளப்படுதலும் குறைபடாதிருத்தலும் கூழின்தொழில். இவை செயஎன் எச்சம் தன்வினை முதல்வினை கொண்டமைக்கு எடுத்துக்காட்டு. மழை பெய்ய மரம் குழைத்தது- பெய்தல் மழையின் தொழில்; குழைத்தல் மரத்தின் தொழில். ‘மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து’ இத் தொடர்களில் மோத்தல் முகர்வான் தொழில், குழைதல் அனிச்சத்தின் தொழில்; நோக்குதல் விருந்து புறந்தர வேண்டியவன் தொழில், குழைதல் விருந்தினனின் தொழில், இவை செய என் எச்சம் பிறவினைமுதல்வினை கொண்டமைக்கு எடுத்துக்காட்டு. மழை பெய்யின் புகழ் பெறும்-பெய்தலும் புகழ் பெறுதலும் மழையின் தொழில்கள். ‘தாம் வேண்டின் நல்குவர் காதலர்’ இத்தொடரில் வேண்டுதலும் நல்குதலும் காதலர் தொழில்கள். இவை செயின் என் எச்சம் தன்வினைமுதல்வினை கொண்டமைக்கு எடுத்துக்காட்டு. மழை பெய்யின் குளம் நிரம்பும்-பெய்தல் மழையின் தொழில்; நிரம்புதல் குளத்தின் தொழில். ‘யாம் வேண்டின், கவ்வை எடுக்கும் இவ்வூர்’ வேண்டுதல் தலைவி முதலாயினார் தொழில்; கவ்வையெடுத்தல் ஊரவர் தொழில். இவை செயின் என் எச்சம் பிறவினை முதல்வினை கொண்டமைக்கு எடுத்துக்காட்டு. மழை பெய்யிய முழங்கும் பெய்தலும் முழங்குதலும் மழையின் தொழில்கள். |