சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-20365

  ‘காணிய வாவாழி தோழி’

காண்டலும் வருதலும் தோழியின் தொழில்கள். இவை செய்யிய என் எச்சம்
தன்வினைமுதல்வினை கொண்டமைக்கு எடுத்துக்காட்டு.

மழை பெய்யிய வான் பழிச்சுதும்- செய்தல் மழையின் தொழில்; பழிச்சுதல் மழை
வேண்டி நிற்பார் தொழில். ‘மாணிழை அரிவை காணிய ஒருநாள்- பூண்க மாளநின்புனை
மணி நெடுந்தேர்’- என்ற தொடரில் காணுதல் தலைவியின் தொழில்; தேர் பூணுதல்
தலைவன் தொழில். இவை செய்யிய என் எச்சம் பிறவினை முதல்வினை கொண்டமைக்கு
எடுத்துக்காட்டு.

மழை பெய்யியர் எழுந்தது- பெய்தலும் எழுதலும் மழையின் தொழில்கள். ‘பசலை
உணீஇயர் வேண்டும்’- உண்ணுதலும் வேண்டுதலும் பசலையின் தொழில்கள். இவை
செய்யியர் என் எச்சம் தன்வினை முதல்வினை கொண்டமைக்கு எடுத்துக்காட்டு.

மழை பெய்யியர் பலி கொடுத்தார்-பெய்தல் மழையின் தொழில்; பலிகொடுத்தல்
மழைவேண்டி நிற்பார் தொழில்.

  ‘கொற்கைச் செழியர் கொங்கர்ப் பணியியர்
      பழையன் வேல்வாய்த் தன்ன’

என்ற தொடரில் பணிவித்தல் செழியர் தொழில்; வேல் வாய்த்தல் பழையன்
தொழில். இவை செய்யியர் என்னும் எச்சம் பிறவினைமுதல்வினை கொண்டமைக்கு
எடுத்துக்காட்டு.

செயற்கு என் எச்சமும், பின், முன், கால், கடை, வழி, இடத்து- என்பனவும்
தன்வினைமுதல் வினையும் பிறவினை முதல் வினையும் கொண்டமை ஒன்றென
முடித்தலான் கொள்ளப்பட்டது.