காரியப் பொருட்டாயவழி அல்லது செயஎன் எச்சம் இறந்த காலம் உணர்த்தாது என்க. எனவே, ஞாயிறு படுதலும் ஒடித்து உண்டலும் வருதற்கும் எஞ்சுதற்கும் காரணம் அன்மையின் ஆண்டு இறந்தகாலம் உணர்த்தாமையின் செய்து என்எச்சமாயே நின்று தமக்குரிய இறந்தகாலம் உணர்த்தின் எனப்படும் என்பதாயிற்று. ஞாயிறுபட்டு வந்தான் என்பது ஞாயிறுபட்டபின் வந்தான் என இறந்தகாலமும், ஞாயிறுபட வந்தான் என்பது ஞாயிறுபடாநிற்க வந்தான் என நிகழ்காலமும் உணர்த்துதல் வழக்குநோக்கி உணர்க. தன்வினை கோடற்கு உரியன பிறவினைகொண்டு முடியும் ஆயினும் முதலொடுசினைக்கு ஒற்றுமை உண்மையின் முதல் வினையும் தன்வினையேயாம் ஆகலானும், தமக்குஉரிய இறந்தகாலமே உணர்த்தி நிற்றலான் செய என் எச்சத்திரிபு ஆகாது செய்து என் எச்சம் முதலியனவேயாம் என்பது அவற்றிற்கு இயல்பாம் ஆகலானும் வழு எனக் களையப்படாஎன்று ஆரய்ந்து அமைத்துக்கொள்க என்பார் ‘முன்னினர் கொளலே’ என்றார்.இன்னும் இதனானே, ஆகிடந்து செறு விளைந்தது என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்திற்கு ஏற்றி அதன் வினையொடு முடிதலும் (இதற்கு வினை முதல்தானே செயப்படு பொருளாம்) ‘பூண் அணிந்து விளங்கிய புகழ்சால் மார்ப.’ பதிற். 65 ‘என அணிந்து என்னும் முதல்வினை சினைவினையொடு முடிதலும் ஆம். உண்டு பசிகெட்டதும் அது. இவ்வாறு கரண காரியப் பொருளவாய்ப் பிறவாற்றான் முடிதலும் கொள்க. 22 |