இது மேல் வழக்கு என்றதன் வகையும் தொகையும் கூறுகின்றது. இ-ள்: இலக்கண நெறியான் வருவதூஉம், இலக்கணம் இன்றேனும் அஃது உடையது போல அடிப்பட்ட சான்றோரான் வழங்கப்பட்டு வருவதூஉம், இலக்கணத்தில் சிதைந்து ஒருகாரணம் இன்றி வழங்கற்பாடே பற்றி மரூஉ முடிபிற்றாய் வருவதூஉம் என இம் மூவகையான வரும் இயல்பு வழக்கு. நன்மக்களிடைக் கூறத்தகாத சொல்லை அவ்வாய்பாடு மறைத்துப் பிற வாய்பாட்டான் கூறுவதூஉம், தகுதி நோக்கி மங்கல மரபால் கூறுவதூஉம், ஒவ்வொரு குழுவின் உள்ளார் தத்தம் குறியாக இட்டுக் கூறுவதூஉம் என இம் மூவகையான் வரும் தகுதி வழக்கினொடு கூட அறுவகைப்படும் வழக்கு நெறி என்றவாறு. எ-டு: நிலம் நீர் தீ வளி விசும்பு என்றாற்போல்வன இலக்கணம் உடையன. இல்முன்-முன்றில், கோவில்-கோயில், பொதுவில்-பொதியில், கண்மீ-மீகண் என்றாற் போல்வன இலக்கணப்போலி. அருமருந்தன்னான்- அருமந்தான், சோழன் நாடு-சோணாடு, பாண்டியன்நாடு- பாண்டிநாடு- என்றாற்போலச் சிதைந்து வருவனவும் வெள்யாடு வெண்களமர் கருங்களமர் என்றாற்போலப் பண்பு குறியாது சாதிப் பெயராய் வருவனவும், குடத்துள்ளும் பிறகலத்துள்ளும் இருந்தநீரைச் சிறிது என்னாது சில என்றாற்போல்வனவும் மரூஉ. |