உண்டு என்னும் செய்து என் எச்சம் செயவென் எச்சத்தின் திரிபு அன்று; அது செய்து என் எச்சமாகவே நின்று பிறவினைகொண்டது. (தொல்.சொல். 457 சே.இ.வி. 248 உரை) உண்டு என்பது காரணகாரியத் தொடர்பு இன்றிப் பிறவினையான் முடிந்தது. (தொல்.சொல். 233-நச்.) உண்டு என்பது செய என் எச்சம் திரிந்து செய்து என் எச்சமாய் வந்தேனும், செய என் எச்சப்பொருளே ஆயினவாறு (நன்.345 மயிலை) உண்டு எனச் செய என் எச்சம் செய்து எனத்திரிந்து நின்றும் அச்செய என் எச்சமுடிபு பெற்றது. (நன்.346 விருத்தி) பிரயோக விவேகநூலார் இக்கருத்துக்களைக்கூறி, வட நூலார் மதம் பற்றி, எஞ்சிய என்பதனை அந்தர்ப்பாவிதணிச்சாக்கி. எஞ்சுவித்த எனக்கொண்டு செய்து என்-எச்சம் தன்வினை கொண்டதாக்குவர் (39. உரை) எஞ்சிய- எஞ்சுவித்த-முதனிலை திரியாதது. (இ.கொ.71 உரை) எஞ்சிய என்பதற்கு எஞ்சுவித்த என்று பொருள் கொள்ள அறியாது சேனாவரையர் முதலாயினார் இடர்ப்பட்டனர் என்பர் முனிவர் (சூ.வி.பக்.10) வடமொழி மரபு பற்றிய அந்தர்ப்பாவிதணித் தமிழுக்கு ஏலாது என்றும், ஒடித்துண்டு எஞ்சிய என்பதற்கு ஒடித்து உண்டபின் எஞ்சிய என்று பொருள் கொடலே ஏற்றது என்றும் சண்முகனார் விளக்கியுள்ளார். (பா.விர். பக். 216-221) |