இது முன்னர்த் ‘தன்வினை பிறவினை ஆயிரு வினையொடு முடியும் முறையது’ என்றும், தன்வினை கொள்வன இவை என்றும், தன்வினையும் பிறவினையும் கொள்வன இவை என்றும் பொதுவகையான் கூறினார்; இஃது அவ்வினை இவ்வினை என்பதூஉம், வினைக்குறிப்பொடு முடிவுழி இவ்வாறு முடியும் என்பதூஉம் கூறுகின்றது. இ-ள்: வினையெச்ச வினைசொற்குத் தெரிநிலை வினையும் குறிப்பு வினையும் ஆராயத் தோன்றிய முடிபுச்சொல்லாம்; ஆண்டுக் குறிப்பு ஆக்க வினையொடு வரும் என்றவாறு. எ-டு: உழுது வந்தான்- மருந்து உண்டு நல்லன் ஆயினான் எனவரும் ‘வினையும் குறிப்பும்’ எனப் பொதுப்படக் கூறிய அதனான், ஓதிப் பெற்ற பொருள்- ஓதி நல்ல சாத்தன்- உழுது பயன் கொண்டு- உழுது அன்றி உண்ணான்- எனப் பெயரெச்ச வினையெச்ச வினை வினைக்குறிப்புக்களும் முடிபு ஆதல் கொள்க. ‘நினையத் தோன்றிய’ என்றதனானே, உழுது வந்தவன்- உழுதுவருதல்- எனத் தொழிற் பெயரொடும் வினைப் பெயரொடும் முடிதலும், |