இது முற்றுச் சொல்லது திரிபாயும் எச்சங்கள் வரும் என்று எய்தாதது எய்துவிக்கின்றது. இ-ள் தெரிநிலை வினைமுற்று திரிந்து வினையெச்சம் ஆகிவருதலாலும், வினைக்குறிப்பு முற்று திரிந்து வினையெச்சம் ஆகி வருதலும் பெயரெச்சம் ஆகி வருதலும் சிறுபான்மை உள என்றவாறு. எ-டு ‘காணான் கழிந்தவைகலும் உண்டென ஒருநாள்’ கலி.37 ‘மோயினள் உயிர்த்த காலை’ அகம்.5 ‘முகந்தனர் கொடுப்ப உவந்தனர் பெயரும்’ புறம்.33 ‘விளிப்பது பயிலும் குறும்பர்துந் துபியொடு’ மலைபடு-7 ‘எருமை நுண்தாது குடைவன ஆடி’ குறுந்.46 எனவும், ‘பெயர்த்தனென் முயங்கயான் விளர்த்தனன் என்றனள்’ குறுந். 84 ‘மக்களுள் இரட்டையாய் மாறினம் பிறந்துயாம்’ யசோதர காவியம், எனவும், ‘சேந்தனை சென்மோ பூந்தார்மார்ப’ ‘கருங்கோட்டு இன்னியம் இயக்கினிர் கழிமின்’ பெரும்பாண். 392 எனவும், ஐம்பால் மூவிடத்தும் தெரிநிலை வினைமுற்றுக்கள் திரிந்து வினையெச்சம் ஆயினவாறு காண்க. |