ஐம்பால் மூவிடத்தும் குறிப்பு வினைமுற்றுக்கள் திரிந்து வினையெச்சக் குறிப்பும் பெயரெச்சக்குறிப்பும் ஆயினவாறு காண்க. இவ்வாறு பெயர்ப்படாதனவே இங்ஙனம் திரிந்து வருவனவாம் எனக் கொள்க பிறவும் அன்ன. முற்றுச் சொல் திரிந்து எச்சமாம் என்னாது எச்சமே முற்றாய்த்திரியும் என்று ஓதின் படும் இழுக்குஎன்னை எனின் இருதிணை ஐம்பால் மூவிடத்திற்கும் பொதுவாகிய வினை நிகழ்ச்சியல்லவோ எச்சமாவன? அவை அவ்வாறு அன்றி, முற்றுச்சொற்கு ஓதிய ஈற்றவாய் இருதிணை ஐம்பால் மூவிடமும் உணர்த்தலின் முற்றுச்சொல்லே எச்சமாய்த் திரிந்தன எனப்படும்; எச்சம் முற்றாய்த் திரிந்தன எனப்படா. ஆதலான் அவ்வாறு ஓதினார் என்க. அவ்வாறன்றி வினைகோடலான் வினையெச்சம் எனின், மார்ஈறும் வினையொடு முடியும் வேற்றுமையும் பிறவும் வினையெச்சம் ஆவான் செல்லும் ஆகலானும், அல்லதூஉம் ‘கண்ணியன் வில்லன்’ எனவரும் வினைக்குறிப்புமுற்றாய்த் திரிதற்கு ஏற்றதோர் எச்சம் இன்மையானும் அஃது இலக்கணம் அன்று என்க. இஃது ஆசிரியர் தொல்காப்பியனாருக்கும் கருத்து ஆதல் சேனாவரையார் உரையான் உணர்க. இக்கருத்தேபற்றி அன்றே, ‘எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்’ என்புழி, ‘எண்பதத்தான்’ என்பதனைப் பரிமேலழகரும் முற்றுவினையெச்சம் என்றதூஉம் என்க.24 |