சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

இடைச்சொல்இயல்-நூற்பா-1389

இடைச்சொல்- வேற்றுமை உருபு, வினைச்சொல்லின் இடைநிலை விகுதி என்பன,
சாரியை. உவமஉருபு, தத்தம் பொருளன, இசைநிறை, அசைநிலை என்ற ஏழ்வகைப்படும்.
தாமே தனித்து நடத்தலின்றிப் பெயர் வினைகளைப் பின்னும் முன்னும் ஒன்றும்
பலவுமாகச் சார்ந்து வந்து பொருள்படுதல் இடைச்சொல்லின் இலக்கணமாம்.

அதுமன்- பெயரைச் சார்ந்து ஓர் இடைச்சொல் பின் வந்தது.

அதுமற்றம்ம தானே- பெயரைச்சார்ந்து பல இடைச்சொற்கள் பின் வந்தன.

கொன்னூர், ஓஒ பெரியன்- பெயர்க்குமுன் ஓர் இடைச்சொல் இயல்பாயும்
அளபெடுத்தும் வந்தமை.

வருகதில் - வினைக்குப்பின் ஓர் இடைச்சொல் வந்தது,

வருகதில் அம்ம- வினைக்குப்பின் பல இடைச்சொற்கள் வந்தன.

ஓஒ தந்தார்- வினைக்குமுன் ஓர் இடைச்சொல் அளபெடுத்து வந்தது. ‘ஏஎ அம்பல்
மொழிந்தனள்’ என்பதும் அது.

உண்டான் முதலியவற்றுள் ஆன் முதலிய விகுதி இடைச்சொற்கள் பிரிக்க
முடியாதபடி சொற்களின் உறுப்பாய் வந்தவாறு காண்க.

போகுக தில்ல- செய்யுட்கண் தில் என்ற இடைச்சொல் ஈறு திரிந்தது.

மன்னைச்சொல், கொன்னைச்சொல்- தம்மை உணர நின்ற வழியும் மன் கொன்
என்ற இடைச்சொற்கள் ஈறு திரிந்தன.

னகாரை- காரம் என்ற எழுத்துச் சாரியை காரை என ஈறு திரிந்தது.