சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

இடைச்சொல்இயல்-நூற்பா-1391

நம்பி முதலியன பெயர்ப்பெயர்- பெயர் அடியாகப் பிறந்த பெயர்.

இந் நூற்பா உரைச் செய்தி பல நச்சினார்க்கினியர் சொற்றவை.

எல்லாம் என்பது இருதிணைக்கும் பொதுவான சொல். அஃது அற்றுச் சாரியை
பெற்று எல்லாவற்றையும் என்று ஆயின் அஃறிணையைக் குறிக்கும். எல்லா நம்மையும்
என நம்முச்சாரியை பெற்றவழி உயர்திணையைக் குறிக்கும். இவ்வாறு அற்று, நம் என்ற
சாரியைகள் பொதுச் சொல்லை ஒவ்வொரு திணைக்கு உரிமை உடையதாகச் சுட்டும்
ஆற்றலுடைமை பொருள் நிலைக்கு உதவுதலாம்.

இவ்வாறே புளியங்காய் என்ற தொடரில் அம்முச்சாரியை சுவைப்புளி அன்று;
புளியமரம் என்பதனையும், சேவின் கோடு என்ற தொடரில் உள்ள இன்சாரியை சேமரம்
அன்று; பெற்றம் என்பதனையும், கார்த்திகையாற் கொண்டான் என்ற தொடரில்
ஆன்சாரியை கார்த்திகைத் திங்களன்று கார்த்திகைநாளே என்பதனையும்,
கார்த்திகைக்குக் கொண்டான் என்ற தொடரில் குச் சாரியை கார்த்திகை நாளன்று
கார்த்திகைத் திங்களே என்பதனையும் உணர்த்துதல் இடைச்சொல் ‘புணரியல்
நிலையிடைப் பொருள் நிலைக்கு உதவு’தலாம். இவற்றிற்கு விதி தொல்காப்பியத்துள்
காண்க.
                    முன்னர் உணர்த்தப்பட்டன வேற்றுமை உருபு வினை உறுப்புக்கள், சாரியை-
என்பன.

உவமஉருபு அணியியலுள் உணர்த்தப்படும். ஈண்டுக் கூறப்படுவன தத்தம் பொருள,
இசைநிறை, அசைநிலை என்பனவே. தொல்காப்பியனாரும் இடைச்சொல் வகை ஏழ்
என்றார்.