இது தத்தம் குறிப்புப் பொருள் செய்வனவற்றுள் ஏகாரம் பெரும்பான்மை பொருள்படுமாறும் சிறுபான்மை அசையாமாறும் கூறுகின்றது- இ-ள்: உண்டேஎ மறுமை எனவரும் தெளிவுப்பொருண்மையும், நீயே கொண்டாய் எனவரும் வினாப் பொருண்மையும் நிலனே நீரே தீயே வளியே எனவரும் எண்ணுப் பொருண்மையும், அவருள் இவனே கள்வன் எனவரும் பிரிநிலைப் பொருண்மையும், யானே கொண்டேன் எனவரும் எதிர்மறைப் பொருண்மையும் என்னும் ஐவகைப் பொருண்மைக்கண்ணும், ‘கடல்போல் தோன்றல காடுஇறந்தோரே’ (அகம்-1) எனச்செய்யுள் இறுதியின் அசைநிலை ஆதற்கண்ணும் வருவன என அறுவகைப்படும் ஏகார இடைச்சொல் என்றவாறு. 2 |