‘மாறுகோள் எச்சம்’ தொல்.275 என எதிர்மறைக் கண் வரும் ஏகாரத்தைத் தொல்காப்பியனார் எழுத்துப்படலத்தில் கூறியதனை உட்கொண்டு இவர் எதிர்மறையும் கொண்டார். இசைநிறைக்கண்வரும் ஏகாரம் சொல்லொடு இணைந்துவரும் ஏனைய ஏகாரம் போலாது ‘ஏ ஏ இவள் ஒருத்தி பேடியோ’ சீவக.652 என்றாற்போலத் தனிச்சீராய் முன்னடுத்து வருதலின் அதனை இவ்வாசிரியர் இயல்பு வேறுபாடுநோக்கி ஏனையவற்றுடன் இணையாது விடுத்தார். (278) நீயே கொண்டார்- நீ கொண்டாயா எனவினா; நிலனேநீரே- நிலனும் நீரும் என எண்; அவருள், இவனேகள்வன்- இவனே என ஒரு கூட்டத்திலிருந்து, ஒருவனைப்பிரித்தமையால் பிரிநிலை. பிரிநிலைக்குப்பிரிக்கப்பட்டாரைக் குறிக்கும் சொல் முன் வருதல் இன்றியமையாதது; யானே கொண்டேன்- யான்கொண்டிலேன் என எதிர்மறை; உண்டேஎ மறுமை- தேற்றப்பொருட்கண் அளபெடுத்தது. (254) |