நிலனும் நீரும் தீயும் வளியும் ஆகாயமும் எனப் பூதம் ஐந்து- எண்ணும்மை. எச்சஉம்மை இறந்தது தழீஇயதும் எதிரது தழீஇயதும் என இருவகைத்து. கொற்றனும் வந்தான் என்பது முன்சாத்தனும் வந்தான் என்பதனைத் தழுவுதலின் இறந்தது தழீஇய எச்ச உம்மை. சாத்தனும் வந்தான் என்பது பின் கொற்றனும் வந்தான் என்பதனைத் தழுவி நிற்றலின் எதிரது தழீஇய எச்சஉம்மை. இனி இவ்விரண்டனையும் எதிர்காலம் தழீஇயின் ஆக்கி இன்று சாத்தனும் வரும்; நாளைக் கொற்றனும் வரும் என எதிரது தழீஇயின என்றலும் ஆம். இன்னும் இவ்வெச்சம்தானே, யான் கருவூர்க்குச் செல்வல்’ என்றாற்கு ‘யானும் அவ்வூர்க்குப் போதுவல்’ என முழுதும் தழுவுவதூஉம், அவ்வாறு கூறினாற்கு’ யானும் உறையூர்க்குப் போதுவல்’ என ஒருபுடை தழுவுவதூஉம் என இருவகைத்தாம். தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார் என்பது எஞ்சாப் பொருட்டாய் நிற்றலின் முற்று உம்மை. |