சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

இடைச்சொல்இயல்-நூற்பா-6403

நெடியனும் வலியனும் ஆயினான் என்பன ஆக்கம் குறித்து நிற்றலின்
ஆக்கஉம்மை.

இஃது ‘அஃறிணை விரவுப்பெயர் இயல்புமார் உளவே’ தொல்.155 எனப்
பண்புபற்றியும் வரும்.

செப்பே வழீஇயினும் வரைநிலை இன்றே’ தொல். சொல். 16 என்பதூஉம் வழுவை இலக்கணம் ஆக்கிக் கோடல் குறித்தமையின் அதன்பாற் படும். 6
 

விளக்கம்
 

இழிவு சிறப்பு என்பதற்கு இழிவினுள் சிறந்த இழிவு என்று பொருள் கொள்ளின்
இவ்வூர்ப் பூசையும் புலால் என்னாது என்பது இழிவுசிறப்பாம். உம்மைப் பொருளைப்
பூசைக்குக் கொண்டாலும் இழிவுசிறப்பாம். உம்மைப் பொருளை ஊருக்குக் கொண்டால்
உயர்வு சிறப்பாகும்.

இறந்தது தழீஇயதற்கு இறந்தகால வினையும் எதிரது தழீஇயதற்கு
எதிர்காலவினையும் தந்து காட்டுதலே தெளிவானது. உம்மை ‘இயல்பு’ என்ற பண்பு
அடுத்து ஆரைக் கிளவி முன்வந்தது. ஆக்கம்- அமைத்துக் கோடல் ஆதலின்,
வழுவமைதி பற்றிவரும் உம்மை ஆக்க உம்மையாம். உரைச் செய்தி பெரும்பாலும்
நச்சினார்க்கினியர் உரையைத் தழுவியதே.


சூறாவளி
 

சாத்தன் வருதற்கும் உரியன் என்பது வாராமைக்கும் உரியன் என்று எஞ்சி நிற்ப
எச்ச உம்மைக்கு உரிய இலக்கணம் முழுதும் ஏற்று நிற்றலின் அஃது எச்சவும்மையாவது
அல்லது எதிர்மறை உம்மை ஆகாது என மறுக்க.