சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

இடைச்சொல்இயல்-நூற்பா-9409

எண்ணிடைச் சொல் சில
 

259. என்றா எனாஒடு எண்ணுக்குறித்து இயலும்.
 

இஃது என்றாவும் எனாவும் ஒடுவும் ஆகிய மூன்றுஇடைச் சொல்லும் எண்ணுப்பொருண்மையைக் கருதி நடக்கும் என்றவாறு.

நிலன் என்றா நீர் என்றா எனவும், நிலன் எனா நீர்எனா எனவும், நிலனொடு நீரொடு எனவும் வரும். 9
 

விளக்கம்
 

இவை மூன்றும் எண்ணுப் பொருட்கண் வரும் என்று இந் நூற்பாவால் குறிப்பிட்டு
இவை பற்றிய சிறப்புச் செய்திகளைப் பின் விளக்குவார். என்றா எனா என்பனபற்றி
அடுத்த நூற்பாவிலும், ஒடு என்பது பற்றி 261 ஆம் நூற்பாவிலும் காண்க.
இந்நூற்பாவுரை சேனாவரையர் உரையைத் தழுவியதாம். (தொல்.சொல்.289)
 

ஒத்த நூற்பா
 

  ‘உமமை தொக்க எனா என் கிளவியும்
ஆஈறு ஆகிய என்றுஎன் கிளவியும்
ஆயிரு கிளவியும் எண்ணுவழிப் பட்டன.’

தொல்.சொல். 289


தொகை பெற்றும் பெறாதும் வரும்
எண்ணிடைச் சொற்கள்
 

260. பெயர்ச்செவ் வெண்ஏ என்றா எனாஎண்
நான்கும் தொகைபெறும் உம்மைஎன்று எனஒடு
இந்நான்கு எண்ணும் அஃது இன்றியும் இயலும்.