இஃது எண்இடைச் சொற்கட்கு எய்தியதொரு சிறப்பு விதி கூறுகின்றது. இ-ள்: இடைச்சொல்லான் அன்றிப் பெயரான் எண்ணப்படும் செவ்வெண் இறுதியும், ஏகாரமும் என்றாவும் எனாவும் ஆகிய இடைச்சொற்களான் எண்ணப்படும் சொற்கள் இறுதியும் ஆகிய நான்கு இறுதியும் தொகைபெற்றே நடக்கும். உம்மும் என்றும் எனவும் ஒடுவும் ஆகிய இடைச் சொற்களான் எண்ணப்படும் இந்நான்கு சொற்களின் இறுதியும் தொகைபெற்றும் பெறாதும் நடக்கும் என்றவாறு, வரலாறு: நிலம் நீர் இரண்டும் எனவும், நிலனே நீரே இரண்டும் எனவும் நிலன் என்றா நீர் என்றா இரண்டும் எனவும், நிலன் எனா நீர் எனா இரண்டும் எனவும் இவை நான்கும் தொகை பெற்றன. |