‘தில்’ இடைச்சொல் |
264. | விழைவே காலம் ஒழியிசை தில்லே. | |
| | |
இது தில் என்னும் இடைச்சொல் பொருள்படுமாறு கூறுகின்றது. இ-ள்: விழைவு குறித்து நிற்பதும் காலம் குறித்து நிற்பதும் ஆண்டு ஒழிந்து நின்ற சொற்பொருள் குறித்து நிற்றலும் என மூன்று வகையினை உடைத்து தில் என்னும் இடைச்சொல் என்றவாறு. |
| வரலாறு: ‘வார்ந்துஇலங்குவைஎயிற்றுச் சின்மொழி அரிவையைப் பெறுகதில் அம்ம யானே’ | குறுந்.14 |
என்புழிப் பெறுதற்கண் உளதாகிய விருப்பம் குறித்துநின்றது. |
| ‘பெற்றாங்கு அறிகதில் அம்மஇவ் வூரே’ | குறுந்.14 |
என்புழிப் பெற்ற காலத்து அறிக எனக் காலம் குறித்து நின்றது. |
| ‘வருகதில் அம்ம எம் சேரி சேர’ | அகம்.276 |
என்புழி, வந்தக்கால் இன்னது செய்வல் என்னும் ஒழியிசைப்பொருள் குறித்து நின்றது.இடம் வரையறுத்து ஓதாமையின் மூன்று இடத்தும் வருதல் எய்திற்றேனும், ஏற்புழிக் கோடலான் விழைவின் என் வருவழித் தன்மைக்கண் அல்லது வாராது எனக் கொள்க. என்னை? |
| ‘விழைவிள் தில்லை தன்இடத்து இயலும்’ | (தொல்.சொல்.260) |
என்ப ஆகலின். |